ஹவுரா: பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுவதும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய நிலையில், சிலர் பட்டாசு வெடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து மேற்குவங்க பாஜ., தலைவர், ‛மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பட்டாசு வெடித்ததில் தவறில்லை,' என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நாட்டு மக்கள் அனைவரும் ஏப்.,5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினத்தில் நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் மின்விளக்குகளை அணைத்து, அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஒளிர செய்தனர். சிலர் பட்டாசு வெடித்தும், வீதியில் தீபந்தத்துடன் வலம் வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனா தாக்குதலில் முடங்கியுள்ள நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடுவதா என சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளானது.